மார்க்ஸ் 135- போராட்டம்: வாழ்க்கையை இயக்கும் விதி!

பிறப்பால் ஜெர்மானியராக இருந்தபோதிலும், 1848-1849-களில் பிரான்ஸ், பெல்ஜியம், பிரஷ்யா ஆகிய

நாடுகளில் தோன்றிய புரட்சிகர இயக்கங்களை நசுக்கிய அந்த நாடுகளின் அரசாங்கங்களால் அந்த நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மார்க்ஸால் எந்த நாட்டின் குடிமகனாகவும் இருக்க முடியவில்லை.

1874-ல் பிரிட்டிஷ் குடிமகனாவதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், “தமது சொந்த நாட்டுக்கும் அரசருக்கும் விசுவாசமாக இல்லாத மோசமான ஜெர்மன் கிளர்ச்சியாளர், கம்யூனிஸ்ட் கோட்பாடுகளை ஆதரித்துப் பேசுபவர்” என்று லண்டனிலுள்ள போலீஸ் தலைமை யகமான ஸ்காட்லாண்டு யார்டு அந்த நாட்டு அரசாங்கத்துக்கு அறிக்கை அனுப்பியிருந்ததால், அவரது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ‘நியூயார்க் ட்ரிப்யூன்’ ஏட்டின் நிருபராக இருந்தார். 1867-ல் ‘மூலதனம்’ என்னும் தலைப்பில் முதலாளிய உற்பத்தி முறை பற்றிய முக்கிய மான விமர்சனப் பகுப்பாய்வு நூலை வெளியிட்டிருந்தார். 1864-ல் தொடங்கி எட்டாண்டுக் காலம் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வழிகாட்டியாக இருந்தார். ‘பிரான்ஸில் உள்நாட்டுப் போர்’ என்னும் நீண்ட உரையில், பாரிஸ் கம்யூனை ஆதரித்துப் பேசியதால், 1871-ல் ஐரோப்பாவில் பரவலாகப் படிக்கப்பட்டுவந்த செய்தியேடுகளின் பக்கங்களில் அவரது பெயர் இடம்பெறலாயிற்று. பிற்போக்குப் பத்திரிகைகள் அவருக்கு ‘சிவப்பு பயங்கரவாத டாக்டர்’ என்ற பெயர் சூட்டியிருந்தன.

‘எந்தவித வேலையிலும் ஈடுபடக் கூடாது’ என்று மருத்துவர் ஆலோசனை கூறியதன் பேரில், ‘நரம்பு மண்டலத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவரும் பொருட்டு, முழு ஓய்வில் இருப்பதற்காக’ 1880 கோடை காலத்தில் மார்க்ஸ் தமது குடும்பத்தோடு ராம்ஸ்கேட்டில் வசித்துவந்தார். அவருடைய மனைவியின் உடல்நிலை அவரது உடல் நிலையைவிட மோசமாக இருந்தது. ஜென்னி ஃபான் வெஸ்ட்ஃபாலன் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். ‘மூச்சுத் திணறி இறந்துவிடுவார்’ என்று அச்சுறுத்தும் வகையில் அவரது உடல்நிலை திடீரென்று மோசமாகியது’. அந்தச் சூழ்நிலையில்தான், 1860-கள் நெடுக ‘தி நியூயார்க் டைம்’ஸின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றிய ஸ்வின்டன், மார்க்ஸை அறிந்துகொண்டு, அவரைப் பற்றிய அனுதாபமிக்க, ஆழமான, துல்லியமான சித்திரத்தை எழுதினார்.

அமெரிக்காவில் செல்வாக்குப் பெற்றிருந்தவரும் முற்போக்குக் கண்ணோட்டங்கள் கொண்டிருந்தவரு மான ஜான் ஸ்வின்டன் (1829-1911), 1880 ஆகஸ்ட் மாதம் ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்தப் பயணத்தின்போது, அவர் ஆசிரியராக இருந்து நடத்திவந்ததும் அப்போது அமெரிக்காவில் மிகப் பரவலாகப் படிக்கப்பட்டு வந்ததுமான ‘தி சன்’ நாளேட்டுக்கு, சரவதேசத் தொழிலாளர் சங்கத்தின் முதன்மையான பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த ஒருவரை நேர்காணல் செய்வதற்காக பிரிட்டனின் தென்கிழக்குக் கடைக்கோடியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ளதும் கென்ட் மாவட்டத் தைச் சேர்ந்தது மான சிறிய கடற்கரை நகரமான ராம்ஸ்கேட்டுக்கு வந்தார்.

‘பெரிய தலையும் வாளிப்பான முகத்தோற்றமும் உடைய, பண்பட்ட, கனிவு நிறைந்த 60 வயது மனிதர்’, ‘பாட்டனாராக இருக்கும் கலையை விக்டர் ஹ்யூகோவுக்குச் சற்றும் குறையாமல் அறிந்திருந்தவர்’, ‘கலைந்து கிடக்கும் நீண்ட, அடர்த்தியான தலைமுடியைக் கொண்டிருந்தவர்’ என்று மார்க்ஸின் உடல் தோற்றத்தை வர்ணித்த ஸ்வின்டன், ‘தங்குதடையற்றதாக, பரந்துவிரிந்த விஷயங்களை உள்ளடக்கியதாக, ஆக்கபூர்வமானதாக, அறிவுக்கூர்மை மிக்கதாக, உண்மையானதாக’ இருந்த ‘அவரது உரையாடலில் தொனித்த எள்ளல்களும், அதில் சுடர்விட்ட நகைச்சுவையும், விளையாட்டுத்தனமான குதூகலமும்’ சாக்ரடீஸைத் தமக்கு நினைவூட்டியதாகக் கூறினார். ‘விளம்பரத்துக்கோ, புகழுக்கோ ஆசைப்படாத, தம்மைப் பற்றிப் பீற்றிக்கொள் வதிலோ, அதிகாரம் கொண்டவராகப் பாசாங்கு செய்வதிலோ சிறிதும் அக்கறையற்ற மனிதர்’ என்று மார்க்ஸைக் குறிப்பிடுகிறார். இது மார்க்ஸ் என்னும் தனிமனிதரைப் பற்றிய ஸ்வின்டனின் சித்திரிப்பு.

ஆனால், ஸ்வின்டன் தமது வாசகர்களுக்குச் சித்திரித் துக் காட்டியது இந்த மார்க்ஸ் அல்ல. ‘தி சன்’ நாளேட்டின் 1880 செப்டம்பர் 6-ம் தேதிய இதழின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட நேர்காணலில் பொதுவாழ்க்கையி லிருந்த மார்க்ஸின் முகம்தான் முதன்மைப்படுத்தப்படு கிறது: ‘கடந்த 40 ஆண்டுகளில் புரட்சிகர அரசியலில் எளிதில் அறிய முடியாத, ஆனால் பெரும் செல்வாக்குச் செலுத்து கிற பாத்திரத்தை வகித்துள்ள, இன்றைய மிகக் குறிப்பிடத்தக்க மனிதர்களில் ஒருவர்’ என்று அக்கட்டுரை யில் மார்க்ஸைப் பற்றிக் கூறும் ஸ்வின்டன், “அவசரப் படாத, அதேசமயம் ஓய்வொழிச்சலற்ற மனிதர் அவர். வலுவான, பரந்த, மேன்மையான மனமுடைய, பரந்து விரிந்த விளைவுகளை ஏற்படுத்தும் திட்டங்களைக் கொண்டுள்ள, தர்க்க ரீதியான முறைமைகளையும், நடைமுறைச் சாத்தியப் பாடுள்ள குறிக்கோள்களையும் வைத்திருக்கிறவர் அவர். தேசங்களை ஆட்டிக் குலுக்கிய, அரியணைகளை நாசமாக்கிய, முடிமன்னர்களையும் பாரம்பரிய மோசடிக்காரர்களையும் இப்போது அச்சுறுத்தி, அதிர்ச்சிக்குள்ளாக்கிக்கொண்டிருக்கிற பூகம்பங்களுக்குப் பின்னால் நின்றதில், இன்னும் பல பூகம்பங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருப்பதில் அவரை நிகர்த்தவர்கள் ஐரோப்பாவில் யாரும் இல்லை” என்று எழுதுகிறார்.

‘தாம் வாழும் காலத்தில் ஆழ வேரூன்றியவராக’, ‘புதியனவற்றின் வருகைக்காக நேவா நதியிலிருந்து ஸீய்ன் நதி வரை, யூரல் மலைகளிலிருந்து பிரன்னீஸ் மலைத் தொடர்ச்சி வரை பாதையை அமைக்கும் கைவண்ணம் கொண்டுள்ளவராக’ தமது மனதில் பதிந்துவிட்ட மார்க்ஸைப் பற்றி ஸ்வின்டன் எழுதினார்: ‘அவர் ஐரோப்பாவை, ஒவ்வொரு நாடாக மதிப்பீடுசெய்து, அவற்றின் மேற்பரப்பிலும் அவற்றின் கீழும் உள்ள அம்சங்களையும் வளர்ச்சிகளையும் முக்கியத்துவம் பெற்றிருந்த மனிதர் களையும் சுட்டிக்காட்டினார்’. மேலும், அவர், “பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலுள்ள அரசியல் சக்திகளையும் மக்கள் இயக்கங்களையும் பற்றிப் பேசினார் – பரந்து விரிந்த பேரலையாகக் காணப்பட்ட ரஷ்யாவின் ஆன்மா, ஜெர்மானியச் சிந்தனையின் அசைவுகள், பிரான்ஸின் செயல்பாடுகள், இங்கிலாந்தின் அசைவற்றதன்மை ஆகியன பற்றி. ரஷ்யாவைப் பற்றி நம்பிக்கையுடனும், ஜெர்மனியைப் பற்றி தத்துவரீதியாகவும், பிரான்ஸைப் பற்றி உற்சாகமாகவும், இங்கிலாந்தைப் பற்றி – பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலுள்ள தாராளவாதிகளால் தங்கள் நேரத்தைச் செலவிட்டு விவாதிக்கப்படும் ‘ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சீர்திருத்தங்க’ளைப் பற்றி வெறுப்புடனும் குறிப்பிட்டு – கவலை தோய்ந்த தொனியுடன் பேசினார்”.

அமெரிக்கா பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த அறிவு ஸ்வின்டனுக்கு வியப்பைத் தந்தது: அமெரிக்க நிகழ்வுகளைக் கவனமாக அவதானித்துவந்தவர் என்றும், ‘அமெரிக்க வாழ்க்கையில் உருவாகிவந்த சக்திகள், நிலைத்து நின்றுவிட்ட சக்திகள் ஆகியன பற்றிய அவரது கருத்துகள் சிந்தனையைக் கிளர்பவையாக இருந்தன’ என்றும் அந்தக் கட்டுரையில் எழுதினார்.

உயிரோட்டமுள்ள அடுத்தடுத்த விவாதங்களில் அந்தப் பகல் பொழுது கழிந்தது. அன்று பிற்பகலில் தமது குடும்பத்தினரைக் கடற்கரையில் சந்திக்கக் கடலோரமாக நடந்துபோகலாம் என மார்க்ஸ் ஆலோசனை கூறினார். ‘எல்லோரையும் சேர்த்து ஏறத்தாழ பத்துப் பேர்’ கொண்ட அந்தக் குடும்பத்தினரை ‘மகிழ்ச்சி நிறைந்த கூட்டம்’ என்று ஸ்வின்டன் வர்ணித்தார். பொழுது சாய்ந்ததும், மார்க்ஸின் மருமகன்களான சார்ல் லாங்குவியும் போல் லஃபார்க்கும் இந்த இருவரோடும் தொடர்ந்து கூடவே இருந்தனர். ‘உலகம், மனிதன், காலம், கருத்துகள் ஆகியவற்றைப் பற்றிய எங்களின் ஒத்திசைவான உரையாடல் கடலுக்கு மேலே ஒலித்தது’ என்றெழுதினார் ஸ்வின்டன். ‘பொருளற்ற வெற்றுப் பேச்சுகளையும், காலத்தின், யுகங்களின் சட்டகத்தையும் கடந்து’, ‘பகலில் நடந்த உரையாடல், மாலையில் விரிந்த காட்சிகள்’ ஆகியவற்றில் மூழ்கிப்போயிருந்த அந்த அமெரிக்கப் பத்திரிகையாளர் அந்தத் தருணங்கள் ஒன்றின்போதுதான் அந்த மாபெரும் மனிதரிடம் ‘இறுதியில் வாழ்க்கையை இயக்கும் விதி’ தொடர்பான கேள்வியைக் கேட்கத் துணிந்தார். மௌனம் குடிகொண்டிருந்த அந்தத் தருணத்தில், புரட்சியாளரும் தத்துவவாதியுமான அவரிடம் இக்கேள்வியை முன்வைத்தார்: ‘வாழ்க்கையில் என்ன இருக்கிறது?’ தமக்கு எதிரே ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கடலையும் கடற்கரையில் அலைந்துகொண்டிருந்த கூட்டத்தினரையும் மார்க்ஸ் நோட்டமிட்டுக் கொண்டிருக்கையில், அவரது மனம் ஒரு கணம் புரட்டப்பட்டதுபோல் தோன்றியது. அந்தக் கேள்விக்கு உறுதியான, ஆர்ந்தமைந்த தொனியில் பதிலளித்தார்: ‘போராட்டம்!’

முதலில், ‘மனச்சோர்வின் எதிரொலி’யைக் கேட்டதாகத் தோன்றிற்று ஸ்வின்டனுக்கு. பிற்பாடு அது அவருக்குச் சரியெனப் பட்டது: ‘போராட்டம்தான் வாழ்க்கையின் நியதி’. அதைப் புரிந்துகொள்ளத்தான் மனிதகுலம் எப்போதும் முயற்சிசெய்து வந்துள்ளது!

‘கார்ல் மார்க்ஸ் (1818 – 83): அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்’ என்னும் நூலிலிருந்து…

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

Published in:

The Hindu

Pub Info:

14 March, 2018

Available in: