Airopiya Naadugallil Valathusaarigalin Valarchiyai Idathusaarigal Thadukka Mudiyuma? Marcello Musto Virivurai”

ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிகளின் வளர்ச்சியை இடதுசாரிகள் தடுக்கமுடியுமா? மார்செல்லோ மஸ்டோ விரிவுரைஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிகளின் வளர்ச்சியை இடதுசாரிகள் தடுக்கமுடியுமா? மார்செல்லோ மஸ்டோ விரிவுரை

பிப்ரவரி 23 அன்று இந்திய வளர்ச்சி ஆராய்ச்சி கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இன்றைய அரசியல் போக்கு மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிலைமைகள் குறித்து கனடாவில் பணிபுரியும் மார்க்சிய சமூகவியலாளர் மார்செல்லோ மஸ்டோ உரையாற்றினார். ஈரோ மணடலத்தில் இன்றுள்ள பெரும் நெருக்கடி மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தம் ஆகிய நிலைகளில் மாஸ்டோவின் அரசியல் கூற்றுகள் கவனிக்கதக்கவை. அவரை அறிமுகம் செய்த பெண்ணிய வரலாற்றாசிரியர். வ.கீதா, மார்க்ஸ்,எங்கெல்ஸ் மற்றும் முதல் இன்டர்நேஷனல் ஆகியவை குறித்து இதுவரை வெளியிடப்படாத தகவல்களை மாஸ்டோ கண்டறிந்து மார்க்சிய வரலாற்றை மறுபார்வை செய்யும் அவருடைய வேலையை குறிப்பிட்டார்.

பெர்லின் சுவர் வீழ்ந்த பின்னர் வரும் 90களின் அரசியல் வரலாற்றிலிருந்து மாஸ்டோ தனது உரையை ஆரம்பித்தார். கிழக்கு ஈரோப்பில் சோவியத் வழி கம்யூனிசம் வீழ்ந்த பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஐக்கியத்தில் கூட்டு சேர ஆரம்பித்தன. இந்த சூழ்நிலையில் இடதுசாரிகள் தோல்வி மனப்பான்மை அடைந்தனர். குறிப்பாக சமூக ஜனநாயகவாத சீர்திருத்தவாத இடதுசாரிகளுக்கும் மித வலதுசாரிகளுக்கும் இடையே கருத்தியல்ரீதியாக எந்த மாற்றமும் இல்லாமல் போய் விட்டது.

ஆட்சியில் இருந்த சீர்திருத்தவாதிகள் வலதுசாரி முதலாளித்துவத்தை ஆதரித்து, ஐரோப்பிய நாடுகளில் அதுவரை கடைபிடித்து வந்ந நல சீர்திருத்த கொள்கைகளை கைவிட்டனர். இதன் விளைவாக இந்நாடுகளில் உள்ள நடுத்தர வர்க்கம் வீழ்ந்து, வேலையின்மை அதிகரி;த்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஈரோப்பில் இளைஞரிடையே வேலையின்மை 35சதமும் கிரீஸில் 50சதத்திற்கும் மேலே எட்டியுள்ளது. இதன் சமூக விளைவை பல ஐரோப்பிய நாடுகள் எதிர் கொண்டு வரும் நிலையில் அவைகள் சமூக துறை செலவுகளை பாதிக்கும் மேல் குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதை நடைமுறைபடுத்திய சீர்திருத்த கட்சிகள் இன்று அழிக்கப்பட்டு வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன.

இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தொழிலாளர் வர்க்கத்திற்கு மாற்று என்று எதையும் வைக்க முடியவில்லை. முக்கியமாக தேசிய அரசுகளை ஆட்டுவிப்பது ஐரோப்பிய ட்ராய்கா ஆகும். ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் ட்ராய்காவில் ஐரோப்பிய கமிஷன், ஈரோப்பியன் மத்திய வங்கி, மற்றும் ஐ.எம்.எஃப் அடக்கம். இந்த அமைப்புகள் தங்களது கொள்கைகளை ஏற்ப தேசிய அரசியலமைப்பை மாற்றுவதற்கு நாடுகளை நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. இந்த கொள்கையின் அடிப்படையே ஐக்கியத்தின் கரன்சி ஈரோவின் மதிப்பை காப்பாற்றுவதாகும். இதற்கு நாடுகள் நிதி கச்சிதம் என் பெயரில் தங்களது நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும்.

இந்த பொருளாதார தாக்கத்தின் நடுவில் வெளிப்படும் ஐரோப்பிய அரசியலின் நான்கு போக்குகளை மார்செல்லோ விவரித்தார். முதலாவதாக, பல நாடுகளில் புதிய இடதுசாரி கட்சிகள் வளர்ந்து வருகின்றன. இவைகள் தங்கள் உள்நாட்டு பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்துவதாக உள்ளன. பல்வேறு கருத்தியல் கொண்ட அமைப்புகளுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடத் தயாராக உள்ளன. இன்றைக்கு சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான கருத்துகளுக்கு எதிரான கருத்துகளை வைக்கின்றன. சில இடங்களில், சீர்திருத்தவாதிகள் அழிந்து விட்ட நிலையில், இந்த அமைப்புகள் சமூக நல கோரிக்கைகளை வைக்க வேண்டிய நிலைகளிலும் உள்ளன. இடதுசாரிகளின் அரசியலை பற்றி பேசுகையில், கிரீஸின் சிரிஸா மற்றும் ஸ்பெயின் நாட்டின் போடேமோஸ் பற்றி மார்செல்லோ குறிப்பிட்டார்.

ஆனால் இந்த தருணத்தில் அரசியல் கட்சிகளும் கருத்துகளும் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை என்ற அரசியல் விரோத போக்கும் ஒருசாரார் மத்தியில் வளர்ந்துள்ளது. இவற்றை ஆதரிக்கும் மக்கள் தொழில்நுட்பவாதிகளை கொண்ட அரசை அமைக்க கோருகின்றனர். இந்த அரசியல் விரோத போக்கு, ஜனரஞ்சகவாதத்தை வளர்த்துள்ளது. கருத்தியல் இல்லாமல் பாபுலிசத்தை நாடும் இந்த கட்சிகள் ஜனரஞ்சக கருத்துகளின் அடிப்படையில் போட்டியிடுகின்றன. இவை அனைத்தையும் பார்த்தால் கருத்தியல் ரீதியான அரசியல் பயணம் முடிவுற்றதாக மார்செல்லோ கருதுகிறார்.

கடைசியாக இன்று வளர்ந்து வரும் நவீன பாசிஸமும் அதன் அடிப்படையில் வளர்ந்து வரும் வலதுசாரி கட்சிகளும் ஆகும். இன்று ஈரோப்பில் வெளிநாட்டவர் மீதான எதிர்ப்பும் பரந்த கொள்கை கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு போர் நடந்து வருவதாக மார்செல்லோ குறிப்பிட்டார். இதில் நலவாதத்தை விட்டு தேசியவாதம் மேலோங்கியுள்ளது. இந்த குறுகிய தேசியவாதம் பரந்த கொள்கை நிறைந்து உள்ள ஸ்காண்டநேவியன் நாடுகளிலும் பரவி வருகிறது.

மக்களின் அரசியல் போக்கை குறித்து, முன்பு இருந்தது போல் இன்று கட்சி மற்றும் அரசுகளின் விசுவாசிகளாக மக்கள் இருப்பதில்லை என்று அவர் கூறினார். இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய ஐக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது இடதுசாரிகளுக்கு முன் உள்ள சவால். எதிர்பார்த்த வகையாக இல்லாமல், ஐக்கியம் இன்று ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சிலரால் ஆட்டுவிக்கும் மையமாக வளர்ந்து உள்ளது. அதன் கொள்கைகள் நாடுகளை ஒரு பக்கம் ஏழ்மையாக்கி உள்ளது இன்னொரு பக்கம் வலதுசாரிக்கு தள்ளி உள்ளது. ஆனாலும் மக்கள் எங்கும் செல்லும் உரிமையை ஐக்கியம் ஏற்படுத்தியுள்ளது. பலநாட்டினருக்கிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய இடதுசாரிகளின் முன் உள்ள கேள்வி என்பது, ஐக்கியத்தை எவ்வாறு இடதுசாரிகள் அணுக வேண்டும் என்பது என்று அவர் குறிப்பிட்டார்.

உலகத்தின் ஒரு பக்கம் உஎள்ள அரசியல் நிலைமைகளின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துரைத்த இந்த விரிவுரை இந்தியாவில் உள்ள போக்குகளுடன் ஒத்து போவதை காணலாம். அரசியலில் அடிப்படைவாத வளர்ச்சி, தேசியவாத பேச்சுக்கள் மக்களின் அன்றாட பிரச்சனைகளையும் தேவைகளையும் மறைக்கின்றன. இதை குறித்து முடிவுரையில் பேசிய வ.கீதா, பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஈரோப்பில் இன்று ‘பொருளாதார நியதிகள்’ மேலோங்கி உள்ளன என்று குறிப்பிட்டார்.. ஒரு சிலர் ஆளும் நிதி அமைப்புகள் அனைத்து ஐரோப்பிய நாடுகளின் விதிகளை தீர்மானிக்கும் போக்கில் அவை இட்டு செல்கின்றன. தங்களது உறுப்பினர்களை இழந்து குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தை தங்கள் பக்கம் இழுக்கும் எந்த ஒரு தூண்டுதல்களை வைக்க முடியாத உள்ள இந்திய இடது சாரிக்கும் பல கேள்விகளை எழுப்புகின்றன என்று அவர் கூறினார்.

 

Published in:

Thozhilalar Koodam

Pub date:

1 March 2016

Pub Info:

Available in: