வினவு செய்திப் பிரிவு, Vinavu

Review of கார்ல் மார்க்ஸ்: அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-83)

நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்

 

ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலியம், பிரெஞ்சு, ஸ்பானியம், போர்ச்சுகீசியம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள மார்செல்லோ முஸ்ட்டோ (1972-இல் இத்தாலியில் பிறந்தவர்), தற்போது கனடாவின் டொரோன்டோ நகரிலுள்ள யோர்க் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் தத்துவம் கற்பித்து வருகிறார்.

கார்ல் மார்க்ஸின் சிந்தனையையும் அதன் இன்றைய பொருத்தப்பாட்டையும் மையப்படுத்தி எழுதிவரும் அவரது நூல்களும், கட்டுரைகளும், நேர்காணல்களும் உலகம் முழுவதிலும் இதுவரை 20 மொழிகளில் வெளிவந்துள்ளன.

The Last marx (1881-1883) : An Intellecutal Biography என்னும் அவரது நூல் 2016-இல் முதன் முதலில் இத்தாலிய மொழியில் வெளியிடப் பட்டு, அண்மையில் மூன்றாவது பதிப்பைக் கண்டுள்ளது. மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளையொட்டி தமிழ், சீன, ஜப்பானிய, கொரிய, ஜெர்மன், போர்ச்சுகீசிய மொழிகளில் வெளிவரும் இந்த நூல், சற்று விரிவுபடுத்தப்பட்ட வடிவத்தில் அடுத்த சில மாதங்களில் ஆங்கில, பிரெஞ்சு மொழிகளிலும் வெளியிடப்படும். (நூலாசிரியர் பற்றிய குறிப்பிலிருந்து …)

2008-இல் முதலாளியம் மிக அண்மைய நெருக்கடியைச் சந்தித்ததிலிருந்து, கார்ல் மார்க்ஸ் புதுப் பொலிவுடன் திரும்பி வந்துள்ளார். பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதற்குப் பிறகு இடைவிடாமல் பறக்கணிக்கப்பட்டு வந்தார். அந்தத் தகர்வுக்குப் பிறகு சொல்லப் பட்டு வந்த ஆரூடங்களுக்கு நேர்மாறாக, மார்க்ஸின் கருத்துகள் மீண்டும் பகுப்பாய்வுக்கும் வளர்த்தெடுத்தலுக்கும் விவாதத்துக்குமான பொருளாகியுள்ளது. ‘நடைமுறையில் நிலவிக் கொண்டிருக்கின்ற சோசலிசத்துடன் அடிக்கடித் தவறாக அடையாளப்படுத்தப்பட்டு வந்தவரும் 1989-க்குப் பிறகு உதறியெறியப்பட்டவருமான ஒரு சிந்தனையாளரைப் பற்றிப் பலரும் புதிய கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

பரந்து விரிந்த வாசகர்களைக் கொண்டுள்ள செல்வாக்கு மிக்க செய்திப் பத்திரிகைகளும் ஏடுகளும் இக்காலத்துக்கு மிகவும் பொருத்தப்பாடுடைய, தொலை நோக்குடைய கோட்பாட்டாளர் என்று அவரைச் சித்திரித்துள்ளன. கிட்டத்தட்ட உலகின் எல்லா இடங்களிலுமே அவர் இப்போது பல்கலைக்கழகப் பாடங்களில் கற்பிக்கப்படுகிறார்; சர்வதேச மாநாடுகளில் விவாதிக்கப்படுகிறார்; மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ள அல்லது புதிய பதிப்புகளில் கொண்டு வரப் பட்டுள்ள அவரது எழுத்துகள் புத்தக விற்பனை நிலைய அலமாரிகளில் மீண்டும் காட்சியளிக்கின்றன; அவரது படைப்புகளைப் பற்றிய ஆய்வு, இருபது அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டுகளாகப் புறக்கணிக்கப் பட்டு வந்த நிலை மாறி, இப்போது அது மிகப் பெருமளவுக்கு வலுப் பெற்று வருவதுடன், பிற ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைகின்ற முக்கியமான விளைவுகளைச் சில சமயம் உருவாக்கி வருகின்றது.

… மாறிய அரசியல் நிலைமைகளோடு சேர்ந்து ஆராய்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் மார்க்ஸின் சிந்தனையைப் பற்றிய விளக்கம் புதுப்பிக்கப்பட்டு வருவது தவிர்க்க முடியாதபடி தொடர்ந்து நீடிக்கத்தான் செய்யும். மார்க்ஸின் சிந்தனை மீதான இந்த அக்கறை அவரின் கடைசிக் காலத்தில் கோட்பாடுகள் தொடர்பாக அவர் மேற்கொண்ட விளக்கங்கள், விரிவாக்கங்கள் ஆகியன மீது குவியும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

மார்க்ஸின் அறிவு வளர்ச்சி பற்றிய ஆய்வாக எழுதப்பட்டுள்ள இந்த நூலை அடுத்தும் இதனை முழுமைப்படுத்தும் விதமாகவும் மார்க்ஸின் சிந்தனையைப் பற்றிய கோட்பாட்டு ஆய்வைப் பிரத்யேகமாகச் செய்யும் நூலொன்றும் வெளிவரவுள்ளது.

மார்க்ஸின் கடைசி ஆண்டுகளில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் ஓய்ந்து விட்டது என்றும், அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்றும் சொல்லும் கட்டுக்கதையை அந்த ஆண்டுகளில் அவர் எழுதிய கையெழுத்துப்படிகள் தகர்த்தெறிகின்றன. உண்மையில், அவர் தொடர்ந்து தமது ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்ததுடன் அதனை புதிய அறிவுத் துறைகளுக்கும் விரிவுபடுத்தியிருந்தார்.

மானுடவியலில் கிடைக்கப்பெற்ற புதிய கண்டு பிடிப்புகள், முதலாளியத்துக்கு முந்திய சமுதாயங்களில் இருந்த கூட்டு உடைமை வடிவங்கள், ரஷியாவில் பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு அங்கு ஏற்பட்ட மாற்றங்கள், நவீன அரசின் பிறப்பு ஆகியன பற்றிய ஆழமான ஆய்வினை 1881, 1882 -ம் ஆண்டுகளில் மார்க்ஸ் செய்தார். அயர்லாந்து விடுதலைப் போராட்டத்துக்கான அவரது உறுதியான ஆதரவு, இந்தியா, எகிப்து, அல்ஜீரியா ஆகியவற்றில் இருந்த காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் காட்டிய உறுதியான எதிர்ப்பு ஆகியவற்றை அவரது கடிதங்களிலிருந்து அறிய முடிவதுடன் சர்வதேச அரசியலில் ஏற்பட்டு வந்த முக்கிய நிகழ்வுகளை அவர் உன்னிப்பாக அவதானித்து வந்தார் என்பதும் தெரிய வருகிறது. ஐரோப்பிய வரலாற்றுப் போக்குகளை மையப்படுத்தி மட்டும் அவர் பார்த்தார் என்றோ, பொருளாதார அடித்தளம்தான் அனைத்தையும் நிர்ணயிக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்றோ, வர்க்கப் போராட்டம் என்பதைக் குறித்து மட்டுமே அக்கறை கொண்டிருந்தார் என்றோ கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது கண்கூடு.

புதிய அரசியல் முரண்பாடுகள், புதிய விஷயங்கள், புதிய புவிப் பிரதேசங்கள் ஆகியன பற்றிய ஆய்வு முதலாளிய அமைப்பைப் பற்றி தாம் தொடர்ந்து மேற்கொண்டு வந்த விமர்சனப் பகுப்பாய்வுக்கு அடிப்படையானது என்று மார்க்ஸ் கருதினார். இது பல்வேறு நாடுகளிலும் அவற்றுக்கே உரிய தனித்தன்மையைப் பார்க்கவும், சோசலிசத்தை அடைவது பற்றி அவர் முன்பு வளர்த்தெடுத்திருந்த அணுகுமுறையிலிருந்து வேறுபட்ட அணுகுமுறைக்கான சாத்தியப் பாட்டைப் பரிசீலிக்கவும் உதவியது. (நூலிலிருந்து பக்.7-9)

தமது படைப்புகளில் மார்க்ஸ், உலகமனைத்திற்கும் பொருந்தக் கூடியது என்று சோசலிச சமுதாய முன்மாதிரி எதனையும் ஆலோசனை பார்க்க கூறக்கூடிய விதிமுறைகளைச் சொல்வதை எச்சரிக்கையுடன்  தவிர்த்தார். அவை பயனற்றவை என்றும், விரும்பக்கூடிய விளைவுக்கு நேர் எதிரானதை உருவாக்குபவை என்றும் கருதினார். அதனால்தான் மூலதனம் நூலின் இரண்டாவது ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய பின்னுரையில் ‘வருங்கால உணவகங்களுக்கு சமையல் குறிப்புகள் எழுதிவைப்பது தமது அக்கறைகளிலொன்றல்ல என்று கூறினார்.  ஜெர்மன் பொருளாதாரவாதி அடோல்ஃப் வேக்னர் (Adolph Wagner [1835-1917]) செய்த விமர்சனங்களுக்குப் பதில் கூறும் முகமாக ஆணித்தரமாகக் கூறினார்:  ‘சோசலிச அமைப்பு எதனையும் நான் ஒருபோதும் நிறுவியதில்லை ‘.

Published in:

Vinavu

Date Published

31 December, 2019

Author: